“நம்மை உண்ணுகிறது நம் உணவு”
சோனா கல்லூரியில் நடந்த டெட் எக்ஸ் நிகழ்ச்சியில் மருத்துவர் சிவராமன் கருத்து.
டெட் எக்ஸ் என்ற சர்வதேச புகழ் பெற்ற நிகழ்ச்சி சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்தது. நான்காவது ஆண்டாக இந்த நிகழ்ச்சியை சோனா எம்.பி.ஏ துறை ஒருங்கிணைத்து நடத்தியது. இயற்கை மருத்துவம், யோகா, சினிமா, தொழில் முனைவோர், என்று பல்வேறு துறைசார்ந்த வல்லுனர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆறாம்திணை புத்தக எழுத்தாளர் மற்றும் மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் “பாரம்பரிய உணவு பற்றியும் இயற்கை உணவுப்பழக்க வழக்கங்கள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்”. தற்போது உள்ள உணவு கலாச்சாரத்தால் மனிதர்களின் ஆயுட் காலம் குறைந்து கொண்டே வருகிறது. எனவே ரசாயனம் கலக்கப்படும் உணவுகளை உண்ணாமல் பாரம்பரிய இயற்கை சார்ந்த உணவை எடுத்துக்கொள்வது நமக்கு நல்லது என்று எடுத்துரைத்தார்.
இதனை தொடர்ந்து பேசிய யோகா குரு வெற்றிவேந்தன், பல்வேறு நோய்களில் இருந்து விடுபடுவதற்காக இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பயிற்சிகள் மிக அவசியம் என்றும் இன்றைய காலத்தில் ஆரோக்கியமான உடல் நலமும், நல்ல மனம் படைத்தவர்களாகவும் சமுதாயத்தில் விளங்கவேண்டுமென்றால் அவர்களுக்கு யோகா பயிற்சி மிக அவசியமானது என்றார். பின்னர் பேசிய நடிகை ரோகினி, “நடிகர் நடிகைகள் பற்றி பொதுவாக சமூகத்தில் இருக்கும் பிம்பம் மிகைபடுத்தப்பட்டது. நடிகர்களும் சாமானியன் ஒருவனைப்போல் எல்லா உணர்வுகளும் சிக்கல்களையும் உடையவர்கள் தான். நட்சத்திரங்களை மேன்மையாக கருதுவதால் நாம் நம்மை தாழ்வாக ஒருபோதும் நினைத்துவிடக்கூடாது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் நட்சத்திரம் ஆவதற்கான திறமை உள்ளது. அதனை புரிந்துகொண்டு அவரவர் துறையில் மேன்மையடைய வேண்டும்” என்றார்.
இதனை தொடர்ந்து பெண்ணின் முன்னேற்றம் என்ற தலைப்பில், நேச்சுரல்ஸ் சி.இ.ஒ குமரவேல், அப்துல் காலம் கற்றுக்கொடுத்தது என்ன என்பது குறித்து இன்டஸ்இந்த் முதன்மை மேலாளர் சித்தார்த் ஜெயக்குமார், மீடியா வளர்ச்சி குறித்து ராமகிருஷ்ணன், மனிதவள மேலாளர் ககன் நந்தி, சென்னை டர்ன்ஸ் நிறுவனர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பேசினர்.
இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், தொழில்துறையினர் என பலர் கலந்துகொண்டனர்.